வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தமிழ் மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி, விசாகம் மற்றும் கிருத்திகை நட்சத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இதையடுத்து வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோயில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது.

அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் வழியிலும் சுவாமி தரிசனம் செய்தனர். வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரான முருகர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை பக்தர்கள் மனமுருக வேண்டி வழிபட்டனர். மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தேவசேனா அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு