பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மாநிலங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் தேர்தல் முடிந்துள்ளதால் திருமலைக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்த நிலையில் தினமும் திருப்பதியில் 20 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்த டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களும் அதிக அளவில் வருவதால் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாளான நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஏழுமலையான் கோயிலில் 71,510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.3.63 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். இதில் 43,199 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.நேற்று காலை நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியது.

இதனால் அதன் வெளியே பாபவிநாசம் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு