பக்தர்களை குழப்பும் வனத்துறை; சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதில் சிக்கல்

வி.கே.புரம்: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல நேற்று பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக நேற்றுமுன்தினம் அறிவித்திருந்த வனத்துறையினர் நேற்று காலை திடீரென கோயிலுக்கு மட்டும் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 3 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக, பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் குளிக்க கடந்த 7ம்தேதி வனத்துறை தடை விதித்தது.

அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சொரிமுத்து அய்யனார் கோயிலும் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு சோதனை சாவடியில் அனுமதியில்லை என்று வனத்துறை அறிவித்து இருந்தது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று (12ம் தேதி) மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் மழை காரணமாக பக்தர்கள் காரையாறு கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனச்சரகர் சத்தியவேல் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பாபநாசம் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படாததால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு மட்டும் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையினரால் நேற்று திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அருவி மற்றும் காரையாறு ஆற்றில் குளிக்க தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வனச்சரகர் சத்தியவேல் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று (12ம் தேதி) அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென கோயிலுக்கு மட்டும் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியளித்தனர். இதனால் வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேற்று தடை என நினைத்து வராமல் இருந்தனர். வனத்துறையினர் அவசர கதியில் அறிக்கைகளை வெளியிட்டு பக்தர்களை குழப்பம் அடைய செய்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு