புரட்டாசி பவுர்ணமி வழிபாடு: சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவத்தலத்தில் முக்கிய விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவர். கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலில், கடந்த காலங்களில் தினசரி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2015ல் ஆடி அமாவாசை தினத்தில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி, 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து சதுரகிரி கோயிலுக்குச் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி முதல் நாளை (செப்.18) வரை 4 நாட்களுக்கு கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புரட்டாசி பவுர்ணமி தினமான இன்று காலையிலேயே விருதுநகர், மதுரை, திருச்சி, சென்னை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தாணிப்பாறை அருகே உள்ள வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர்.

காலை 6.30 மணியளவில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர். முன்னதாக பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறை ஊழியர்கள், ‘பகல் 12 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி, இரவில் கோயிலில் தங்க அனுமதியில்லை. செல்லும் வழியில் நீரோடைகளில் குளிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். பவுர்ணமியை சுந்தரமகாலிங்கம் சுவாமி பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், நிர்வாக அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

தாராபுரம் அருகே சாலையோரம் குப்பைமேட்டில் குவிந்து கிடந்த தேசிய கொடி

சினிமா நடன இயக்குநர் ஜானி பாலியல் வழக்கில் கைது..!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மாநில உரிமைகளை பறிக்கும்: தமீமுன் அன்சாரி கண்டனம்