மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு; சபரிமலையில் இன்று இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி: நாளை காலை நடை அடைப்பு


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கின. அப்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்டவரிசையில், நீண்ட நாட்கள் காத்திருந்து ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது. மண்டல காலம் அன்றுடன் நிறைவடைந்து சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் 2 நாள் இடைவெளிக்குப் பின்னர் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். கடந்த 18ம் தேதி வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர். நேற்றுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது.

இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் பக்தர்கள் யாரும் சபரிமலை சன்னிதான பகுதியில் தங்க அனுமதி இல்லை. நாளை காலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். 5.30 மணியளவில் திருவாபரணம் அடங்கிய பெட்டகங்கள் பந்தளத்திற்கு கொண்டு செல்லப்படும். தொடர்ந்து காலை 6 மணிக்கு பந்தளம் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதி தரிசனம் செய்வார். இந்த சமயத்தில் வேறு யாரும் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதன்பின் கோயில் நடை சாத்தப்படும். தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி 18ம் படி வழியாக இறங்கி பந்தளத்திற்கு செல்வார். இதன்பின் நெய் தேங்காய் எரிக்கப்படும் ஆழியில் எரியும் தீ அணைக்கப்படும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்படும்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு