தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை: ஏழுமலையான் கோயிலில் பரிகார பூஜை செய்ய முடிவு

திருமலை: திருப்பதி கோயில் லட்டுவில் கலப்பட விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக பிரமோற்சவத்திற்கு முன் பரிகார பூஜை செய்ய முடிவு செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து பங்கேற்க உள்ளார்.

இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா மற்றும் அர்ச்சகர்கள் ஆந்திர மாநிலம் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடு இல்லத்துக்கு நேற்று காலை சென்றனர். அங்கு முதல்வரை சந்தித்து பிரமோற்சவ அழைப்பிதழை வழங்கினர். அப்போது முதல்வருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் உள்ளிட்டோர் வேத ஆசீர்வாதம் செய்து சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் அப்போது ஆலோசனை நடத்தினார். லட்டு பிரசாத நெய் கலப்பட விவகாரம் தொடர்பாக ஆலோசித்தனர். மேலும் பரிகார பூஜைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரமோற்சவம் தொடங்குவதற்கு முன்பு பரிகார பூஜைகளை மேற்கொள்வது குறித்தும் சில ஆலோசனைகளை முதல்வர் கூறியதாக தெரிகிறது.

* சந்திரபாபு நாயுடு செய்த தவறுக்கு பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்: நடிகை ரோஜா
முன்னாள் அமைச்சர் ரோஜா பேசிய வீடியோவில், ‘பவன் கல்யாண் பாவ மன்னிப்பு விரதம் இருப்பதாக கூறி தொடங்கியுள்ளார். உண்மையிலேயே பாவமன்னிப்பு விரதம் இருக்க வேண்டுமென்றால், தவறு செய்தவர்கள் இருக்க வேண்டும். ஆனால் கூட்டணியில் இருப்பதால் சந்திரபாபு செய்த தவறுக்கு பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்.

அந்த புண்ணியம் பவன் கல்யாணுக்கு மட்டுமே சாருமே, தவிர சந்திரபாபு நாயுடு செய்த தவறுக்கு அதற்குண்டான பலனை அனுபவிப்பார்/ திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் விவகாரம் தொடர்பாக அறங்காவலர் குழு உறுப்பினர்களாக இருந்த பாஜவை சேர்ந்தவர்கள் ஏன் அப்போதே மோடி, அமித்ஷாவிடம் புகார் கூறவில்லை’ என கூறியுள்ளார்.

Related posts

திருப்பதியில் லட்டு சர்ச்சை; பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ‘சாந்தி யாகம்’

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்!