சின்ன சின்ன ஆசை… சிறகடிக்க ஆசை: சிறுக, சிறுக சேமித்து விமானத்தில் கோவா பறந்த கிராம மக்கள்

நெல்லை: 10 ஆண்டுகளாக சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தில் கோவாவுக்கு விமானத்தில் பறந்து கிராம மக்கள் அசத்தினர். நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே தாட்டான்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட துறைகளிலும் இளைஞர்கள் சிலர் சேவையாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக சிறு, சிறு சேமிப்புகள் மூலமாக அவ்வப்போது சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு எப்படியாவது ஒரு முறை விமானத்தில் செல்ல வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களது ஆசை கனவாகவே இருந்தது. இதைதொடர்ந்து, தங்களது கனவை நிறைவேற்றும் வகையில் சிறுக, சிறுக சேமித்து வைத்து புனித சுற்றுலா பயணமாக விமானம் மூலம் கோவா சென்று சவேரியாரை தரிசிக்க முடிவு செய்தனர். கிராம மக்களின் 10 ஆண்டு முயற்சியின் பலனாக நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 130 பேர் விமானத்தில் பறக்க டிக்கெட்டை முன்பதிவு செய்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவா புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று காலை சவேரியார் ஆலயத்தை பார்வையிட்டனர். 2 நாட்கள் கோவாவை அவர்கள் சுற்றி பார்க்கின்றனர்.

முன்னதாக கடந்த 19ம் தேதி கோவா புறப்படுவதற்கு முன்பு மாலை புனித அருளானந்தர் ஆலயம் முன் அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் விமானத்தில் பறக்கும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவற்றை அடையாளமாக வைத்து சென்றனர். இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறுக சிறுக சேமித்த பணத்தின் மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். மேலும் எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்று, ரயிலில் திரும்ப உள்ளோம் என்றார்.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்