பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவிக்க தேவை எழவில்லை: டிட்டோஜாக்கிற்கு தமிழ்நாடு அரசு விளக்கம்


சென்னை: 58 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவிக்க தற்போதைய நிலையில் தேவை எழவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 அம்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) சார்ந்த பதிவுகள் ஆசிரியர்களை வைத்து மேற்கொள்ள கூடாது, பள்ளியின் நலனுக்கு தேவையின் அடிப்படையில் மட்டுமே எஸ்.எம்.சி கூட்டம், பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாகப் பயன்படுத்தாமல், அனுபவம் மிகுந்த, விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவைகளில், தணிக்கைத்தடை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஊக்க ஊதியம், உயர்கல்வி பயின்ற 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி (பதவி உயர்வுக்கு மட்டும்) வழங்கிடும் கருத்துரு ஆகியவை அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும் சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதி தீர்ப்பாணையின் அடிப்படையில் அந்த கோரிக்ககள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 58 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (தொடக்கக் கல்வி) பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவிக்க தற்போதைய நிலையில் தேவை எழவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்டவாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தவிர்த்து மற்ற கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கு (டிட்டோஜாக்) தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு