துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்: புதிய பொறுப்பில் திறம்பட செயலாற்றி பெரும் வெற்றி பெற தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:பொறுப்பேற்ற அனைத்துத் துறையியிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி, அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் துணை முதல்வர் பொறுப்பால் மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும், மக்கள் பயன்பெறும் பல புதிய திட்டங்களையும் கொண்டு வருவார் என உறுதியாக நம்புகிறேன்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உயர்வு பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இன்று இந்திய அரசியலமைப்பு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் முன் உறுதியேற்கும் நீங்கள், நிச்சயம் அதன்படி செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாட்டின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் எனது விருப்பங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: தந்தையோடு சேர்ந்து கரம் கோர்த்து தமிழ்நாட்டை வளமான பாதையில் வழி நடத்துவதற்கு வருங்கால வைப்பு நிதியாய் நிற்கிறார் உதயநிதி. கோடிக் கணக்கான தொண்டர்களின் இதய நிதியாய் வலம் வந்து இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களின் சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி, கமல் உள்பட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
தமிழக துணை முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று தொலைபேசி மூலம் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் உள்பட பல்வேறு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், சிம்பு, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், வடிவேலு, சந்தானம், அருள்நிதி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட்பிரபு, நெல்சன், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி மற்றும் கவிஞர் வைரமுத்து உள்பட பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது எக்ஸ் தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை