டெபாசிட் இழந்த வேட்பாளர்கள் எடப்பாடியை சந்தித்து விளக்கம்: அதிமுக நிர்வாகிகளே பாஜவுக்கு ஆதரவாக வேலை பார்த்ததாக புகார்

சேலம்: கட்சி நிர்வாகிகளே பாஜவுக்கு ஆதரவாக வேலை பார்த்ததாக டெபாசிட் இழந்த அதிமுக வேட்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி மற்றும் வேலூர், தென்சென்னை, புதுச்சேரி என 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டை பறிகொடுத்தது.

இது எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியிலும், டிடிவி தினகரன் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பாஜ வேட்பாளராக திருநெல்வேலியில் போட்டியிட்டார். அதிமுகவை அடித்தளமாக கொண்ட இவர்கள் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்ததால் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலேயே முடங்கியுள்ளார். மாஜி அமைச்சர்கள் அவரை சந்தித்து, தோல்விக்கான காரணங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், டெபாசிட் இழந்த திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி, தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆகியோர் நேற்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். டெபாசிட் இழந்து போகும் அளவில் என்ன நடந்தது என எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேட்டார். அப்போது கட்சிக்காரர்களே தங்களை பழி வாங்கி விட்டதாகவும் பாஜவினருக்கு ஆதரவாக வேலை பார்த்ததாகவும் விளக்கம் அளித்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார் என்ற பட்டியலை தருமாறு எடப்பாடி கேட்டுள்ளார். இவ்வாறு ஒரு மணி நேரம் தனித்தனியாக பேசிய அவர்கள் மிகுந்த மனக்கலக்கத்துடன் புறப்பட்டு சென்றனர்.

அதேபோல சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, 6 சட்டமன்ற தொகுதிகளில் இடைப்பாடி தொகுதியில் மட்டுமே அதிமுக கூடுதலான வாக்குகள் பெற்றிருந்தது. மற்ற 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்த நிலையிலும் கூட அங்கு கூடுதல் வாக்குகளை பெறவில்லை. கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 3 தொகுதியிலும் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த எடப்பாடி, மாவட்ட செயலாளர்களை அழைத்தார்.

இதன்படி சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்து பேசினர். ஓட்டு குறைந்த தற்கு காரணம் என்ன? கட்சிக்காக வேலை செய்யாதவர்கள் யார், யார் என எடப்பாடியிடம் விளக்கம் அளித்தனர். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தோல்விக்கான காரணம் குறித்து மாவட்ட செயலாளர்கள் விளக்கி வருகின்றனர். கோவையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை டெபாசிட் இழக்க வைப்பதற்கு எல்லா வேலையும் அதிமுக சார்பில் செய்யப்பட்டது. அங்குள்ள மாஜி அமைச்சரும் மாவட்ட செயலாளருமான வேலுமணி, எடப்பாடியை இன்னும் சந்திக்க வரவில்லை. இதனால் அதிமுகவினரிடையே மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி