அடுத்தடுத்து வடம் அறுந்ததால் புறப்பாடு தாமதம் நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நெல்லை: நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவின் 518வது தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வடம் அடுத்தடுத்து அறுந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் தேர் இழுக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வரலாற்று பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கடந்த 13ம் தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தேரோட்டத்தையொட்டி சுவாமி, அம்பாள் ராஜகோபுரங்கள், அனுப்பு மண்டபம், மாக்காளை, தங்க கொடி முன்பாகவும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் அலங்கரிக்கப்பட்டு யாழிகள், பிரம்மா குதிரைகள் பொருத்தப்பட்டும், பூக்கள், வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டும், வட கயிறுகள் பொருத்தப்பட்டும் ேதரோட்டத்துக்கு தயார் நிலையில் இருந்தன.

ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (21ம் தேதி)அதிகாலை 4 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சுவாமி நெல்லையப்பர் தேரை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி, ராபர்ட் புரூஸ் எம்பி மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தயாராக நின்றிருந்தனர். அப்போது தேரின் 4 வடங்களில் 3 வடங்கள் திடீரென்று அறுந்து விழுந்தன. உடனே புதிய வடங்கள் கொண்டு வரப்பட்டு அறுந்த வடங்களுக்கு பதிலாக கட்டப்பட்டன.
அதன்பின்னர் தேரை பக்தர்கள் இழுத்த போது அதே இடத்தில் மீண்டும் வடம் அறுந்தது. இதையடுத்து மற்றொரு புதிய வடம் கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டு சரியாக காலை 8.32 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நெற்றிப் பட்டம் கட்டி அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை முன்னே செல்ல சிவ தொண்டர்கள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது.

10 அடி தூரம் தேர் சென்ற நிலையில் மீண்டும் 4வது முறையாக மீண்டும் வடம் அறுந்தது. இதையடுத்து வடங்களுக்கு பதிலாக சங்கிலியை கோர்த்து தேரை இழுக்க ஆலோசித்தனர். ஆனால் இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மீண்டும் வடத்தை சீர் செய்து தேரோட்டம் தொடங்கியது. காலை 9.50 மணி அளவில் தேர் வாகையடி முனைக்கு வந்து சேர்ந்தது. பிரதான தேரின் தேரோட்டம் தொடங்க தாமதம் ஆனதால் விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்க தாமதமானது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி தலைமையில் நெல்லை மாநகரம் மற்றும் வெளி மாவட்ட போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என மொத்தம் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு