டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

பூந்தமல்லி: திருவேற்காட்டில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக நகர்மன்ற தலைவர் மூர்த்தி, ஆணையாளர் கணேசன் ஆகியோர் ஆலோசனையின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனையும் மீறி அலட்சியத்துடன் செயல்பட்டு டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க ஆணையர் கணேசன் நகராட்சி சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ் மேற்பார்வையாளர்கள், டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு