பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா லாக்டவுன் காரணங்களால் 7 ஆண்டில் 37 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடல்: 1.34 கோடி பேர் வேலையிழந்ததாக பகீர் தகவல்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா லாக்டவுன் காரணங்களால் கடந்த 7 ஆண்டில் 37 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும், 1.34 கோடி பேர் வேலையிழந்ததாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 73வது ஆய்வு அறிக்கையுடன் மேற்கண்ட கணக்கெடுப்பு அறிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா லாக்டவுன் போன்ற காரணங்களால் கார்ப்பரேட் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்பதையே ஆய்வறிக்கை காட்டுகிறது.

சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒன்று, இந்தியாவில் இருக்கும் வேலையில்லா திண்டாட்டத்தின் பல்வேறு அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் அறிக்கையின்படி, கடந்த 2015-16 மற்றும் 2021-22ம் ஆண்டுக்கு இடையில், அதாவது கடந்த ஏழு ஆண்டுகளில் 37 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அதில் பணிபுரியும் 1 கோடியே 34 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறை அல்லது சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் தொடர்புடைய அமைப்புசாரா துறைகள் ஆகும்.

உற்பத்தித் துறையில் மட்டும் 18 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால் 54 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த 2022 அக்டோபர் – 2023 செப்டம்பர் இடையில், சுமார் 17.82 கோடி இணைக்கப்படாத நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் செயல்பட்டு வருகின்றன. 2015 ஜூலை – 2016 ஜூனுக்கு இடையில் அவற்றின் எண்ணிக்கை 19.70 கோடியாக இருந்தது. அதாவது, ஏழு ஆண்டுகளில் சுமார் 9.3 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டன. அதேபோல், அவற்றில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் 2015-16ல் 3.60 கோடியாக இருந்த நிலையில், 2022-23ல் 3.06 கோடியாக அதாவது 15 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது இத்துறையில் 54 லட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இருப்பினும், 2021-22 முதல் 2022-23 வரை ஒப்பிட்டுப் பார்த்தால், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு