ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபம் இடிப்பு: ஐதராபாத்தில் இன்று பரபரப்பு


திருமலை: ஐதராபாத்தில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபம் இன்று இடித்து அகற்றப்பட்டது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தும்மிடிகுண்டா ஏரிக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஐதராபாத் நகரில் மழை காலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் ஏரி, குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற முதல்வர் ரேவந்த்ரெட்டி அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் தலையீடு இல்லாத வகையில் ஐபிஎஸ் அதிகாரி ரங்கநாதன் தலைமையில் ஹைட்ரா அமைப்பை உருவாக்கி உத்தரவிட்டார்.

இந்த அமைப்பினர் ஐதராபாத்தில் பல இடங்களில் நீர் ஆதார பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பல்வேறு கட்டிடங்களை கடந்த சில வாரங்களாக அகற்றி வருகின்றனர். அதன்படி இன்று ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றி வருகின்றனர். மேலும் கட்டிடம் இடிக்கப்படுவதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் போட்டோ, வீடியோ எடுப்பதை போலீசார் தடுத்தனர். அதேபோல் முன்னாள் அமைச்சரும் பி.ஆர்.எஸ். கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஜவ்வாடா பண்ணை இல்லத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதுதொடர்பாக கே.டி.ராமாராவ் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், அந்த பண்ணையை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் யாராக இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் எதையும் விட்டு வைக்க மாட்டோம் என்று ஹைட்ரா கமிஷனர் ஏ.வி. ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்