ஜனநாயகத்தின் வெற்றி

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கோஷத்துடன் இந்த முறை 400 தொகுதிகளுக்கு மேல் என்று உற்சாகமாக பிரசாரத்தை தொடங்கியது பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. அதிலும் குறிப்பாக நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடியே இந்த கோஷத்தை ஆரம்பித்து வைத்தார். இப்போது 300ஐ கூட தொட முடியாமல் சுருங்கியிருக்கிறது பா.ஜ கூட்டணி. 2014ல் பா.ஜ மட்டும் தனியாக 282 தொகுதியிலும், 2019ல் 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. 2024ல் அதே வேகத்துடன் இந்த முறை 400க்கும் மேல் என்ற கோஷத்துடன் ஆரம்பித்தார்கள்.

அதிலும் குறிப்பாக 2014ல் 44 இடங்களும், 2019ல் 52 இடங்களும் பிடித்த காங்கிரஸ் கட்சியை இந்த முறை 50 இடங்களுக்கும் குறைவாக சுருக்கி, 2024ம் ஆண்டிலும் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கவிடமாட்டோம் என்று இறுமாப்புடன் மோடி, அமித்ஷா பேசினார்கள். இப்போது தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது?. 2014, 2019ல் தனிப்பெரும்பான்மை பெற்ற பா.ஜவால் இந்த முறை தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. 240க்கும் மேற்பட்ட தொகுதிகள் தான் பெற்று இருக்கிறார்கள். பா.ஜ கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 290 இடங்களை கடந்தாலும் இந்த முறை 300 இடங்களை தாண்ட முடியவில்லை.

அதே சமயம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி இந்த முறை கடுமையாக போராடி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மட்டும் தனியாக 100 இடங்களை நெருங்கியிருக்கிறது. இந்தியா கூட்டணி 235 இடங்களை பிடித்து மிரட்டியிருக்கிறது. ஆட்சி அமைக்க கூடிய பெரும்பான்மை பா.ஜ தலைமையிலான கூட்டணிக்கு உள்ளது என்றாலும், இப்போது பந்து ஆந்திராவில் 16 இடங்களை பிடித்துள்ள சந்திரபாபுநாயுடு வசமும், பீகாரில் 12 இடங்களை பிடித்துள்ள நிதிஷ்குமார் வசமும் உள்ளது. அதனால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை குறிவைத்து காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

பா.ஜ கூட்டணியோ அல்லது இந்தியா கூட்டணியோ, எந்த கூட்டணி ஆட்சி அமைத்தாலும் இனிமேல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மிருகபலம் பெற்று பா.ஜ பல்வேறு சட்டங்களை பல்வேறு எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியது. பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சி தலைவர்களை மிரட்டி சிறையில் அடைத்தது. பலரை பா.ஜவிற்குள் இணைத்து, மிகப்ெபரிய கட்சியாக காட்டிக்கொண்டது. இனி அந்த வேலைகள் நடக்காது. அதற்கான மணி தான் இந்த மக்களவை தேர்தலில் அடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக எந்த முடிவு என்றாலும் கூட்டணி கட்சிகள் இசைவோடு தான் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஆட்சியை நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது இந்த தேர்தல். அதனால் பா.ஜ கூட்டணி ஆட்சி அமைத்தாலும் சரி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்குமே தவிர கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஒரு கட்சி ஆட்சியாக இருக்காது. இதுதான் நமது ஜனநாயகத்தின் வெற்றி.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு