சேரம்பாடியில் யானை உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானை மற்றும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வன விலங்குகள் மனித மோதல்கள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில் நேற்று மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க தலைவர் ஷிபி தலைமை வகித்தார். செயலாளர் பழனி வரவேற்று பேசினார். பொருளாளர் ஆசிம், ஒருங்கிணைப்பாளர்கள் ரவி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கூடலூர் பந்தலூர் பகுதியில் இதுவரை காட்டு யானைகள் மற்றும் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினை அரசு கவனத்தில் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும்.

மக்கள் வசிப்பிடங்களுக்கு இடையே உள்ள காடுகளை அகற்றி மக்கள் வசிக்கும் இடம் மற்றும் விவசாய நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். தேவையான இடங்களில் அகழி மற்றும் மின்வேலிகள் அமைக்க வேண்டும். யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான உணவு தீவனங்களை வனத்தில் வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்கு மனித மோதல்களை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வனம் மற்றும் மக்கள் வசிப்பிடத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுநல அமைப்பினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.தொடர்ந்து பொதுமக்களின் போராட்டங்கள் பல்வேறு விதங்களில் தொடரும் என மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related posts

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்