என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு 8 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி என்எல்சி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் என்எல்சி நிர்வாகத்துக்கு இடையிலான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து பதிலளிக்கும்படி என்எல்சி மற்றும் ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் நீதிமன்ற நிவாரணத்தை எதிர்பார்த்து போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை இரண்டு வாரங்களில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கோரிக்கையை பெற்று 8 வாரங்களில் அதன் மீது சட்டப்படி உரிய முடிவெடுத்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் தொழிலாளர்கள் ஈடுபடக் கூடாது.

அதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும் என்எல்சி நிர்வாகம் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டார். விசாரணையின் போது அணுமின் நிலையங்களும் அனல் மின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும் இந்த நீதிமன்றமும் எதிர்பார்த்திருக்கிறது. அணுமின் நிலையம் அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முறைகளை கையாள வேண்டும். காவிரி நதி மீது சூரிய மின்சக்தி ஆலைகளை அமைத்தால் என்எல்சியில் இருந்து கிடைக்கும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்