கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: தமிழகத்தில் 100 இடங்களில் நடந்தது

புதுடெல்லி: கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கினர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை ஒடுக்க டெல்லி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் வரமுடியாதபடி தடுப்புகள் அமைத்து எல்லை மூடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் ஒன்றிய அமைச்சர்கள் குழு 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். அவர்கள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை எனவும் மார்ச் 10ம் தேதி (இன்று) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் ஒன்றிய அரசு தனது பொறுப்பை தட்டி கழிக்க கூடாது, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் எனவும் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடந்தது. டெல்லி, பஞ்சாப், அரியானா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்’ என ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாட்டில் ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று 100 இடங்களில் ரயில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் முன் காலை முதல் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னை எழும்பூரில் பகல் 12 மணிக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ரயில் போராட்டம் நடந்தது. டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சோழன் எக்ஸ்பிரசை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றனர். பட்டுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த ரயில் நிலையம் வந்தனர். அவர்களை ரயில் நிலையம் முன் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமல்ராம் தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த நாகை ரயில் நிலையம் நோக்கி வந்தனர். எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் மறியல் போராட்டம் நடத்த வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர், திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதேபோல் திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். நீடாமங்கலத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இன்று காலை 9.30 மணி அளவில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கடலூர், சிதம்பரம், திருச்சி உள்பட 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை