டெல்டா மாஜி மந்திரிகளுக்கு ஷாக் கொடுக்க திட்டம் போட்டிருக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசு ஆணையை தேடிக்கொண்டிருக்கிறார்களாமே வனத்துறையினர். என்ன விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெல்லை மாவட்டம், பாபநாசம் அணைக்கு செல்லும் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நடக்கும் ஆடி அமாவாசை விழா மிகவும் பிரசித்தம். இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் கெடுபிடி செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கோயிலுக்கு கிடா நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு சென்ற பக்தர்களை வனத்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த பிரச்னை கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் எதிரொலித்தது.

இதில் விவசாயிகள் வனத்துறை மீது புகார் வாசிக்க, பக்தர்களின் பாரம்பரிய வழக்கங்கள், நடைமுறைகளை தடை செய்யக் கூடாது. அதற்கு அரசு ஆணை இல்லையே, அப்படி இருக்கும் போது வனத்துறை எப்படி தடை விதிக்க முடியும் என கலெக்டர் வனத்துறையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு வனத்துறையோ, ஆடி அமாவாசை விழாவின் போது மட்டுமே கிடா நேர்த்திக்கடனுக்கு அனுமதிக்க முடியும். மற்ற நேரங்களில் அனுமதிக்க முடியாது என்று கூற அதற்கான அரசு ஆணையை அனுப்புங்கள் என கூட்டத்திலேயே கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த கேள்வியால் வனத்துறை அதிகாரிகள் வெலவெலத்துப் போய் விட்டனர். எங்கே அந்த அரசு ஆணை என தேடிக் கொண்டிருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவில் மாஜி அமைச்சர்கள் மீது அதிருப்தியால் நிர்வாகிகளை அதிரடியாக மாற்ற சேலம்காரர் முடிவு செய்திருக்கிறாராமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இலை கட்சி சொல்லும் அளவுக்கு இல்லை. சேலம்காரர் அணியில் டெல்டாவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள், எம்பிக்கள், முக்கிய நிர்வாகிகள் இருந்தாலும் கட்சி ரீதியாக பெரிய ரியாக்க்ஷன் இல்லாமல் அவர்கள் இருந்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையின் போது கூட ஆதரவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை கூட இவர்கள் நேரில் சந்திக்கவில்லை. தாமரை- இலைகட்சி இடையே ஏற்பட்ட பனிப்போரால் தாமரையுடன் கூட்டணியை சேலம்காரர் முறித்துக்கொண்டதால் தாமரை மேலிடம் கடும் கோபத்தில் இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் தாமரை மாநில தலைவர், டெல்லி மேலிட தலைவர்களுக்கு எதிராக எதும் கருத்து தெரிவிக்காமல் நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் வாய் திறக்காமல் இருந்து வருவது தான் நமக்கு நல்லது. நம்ம ஏதாவது கருத்து தெரிவிக்க போய் சேலம்காரர் மீது இருக்கும் கோபம் நம்ம பக்கம் திரும்பி ரெய்டு நடத்தி விடுவார்கள். இதனால் நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும் என மாஜி அமைச்சர்களுக்குள் பேசிக்கிறாங்களாம். இந்த தகவல் தெரிய வந்ததும் மாஜி அமைச்சர்களின் அதிருப்தி நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள் பற்றி சேலம்காரர் கவனத்துக்கு புகாராக கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் சேலம்காரர் டெல்டாவில் உள்ள மாஜி அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார். இப்படியே சென்றால் டெல்டாவில் செல்வாக்கு இல்லாமல் போய் விடும். மாஜி அமைச்சர்கள் மீது அதிருப்தியில் டெல்டாவில் மாற்றம் கொண்டு வருவதற்கான வேலையில் சேலத்துக்கார் தீவிரமாக இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்குள் இலை கட்சியில் டெல்டாவில் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் இருக்க கூடும் என டெல்டா மாவட்டம் முழுவதும் தொண்டர்களுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மது விற்பனை தடுப்பு பிரிவு விவகாரம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘கடலோர மாவட்டம் ஒன்றில் திருட்டு மது விற்பனையை தடுக்க வேண்டும் என காக்கி உயர் அதிகாரி போட்ட உத்தரவையே அந்த மது விற்பனை தடுப்பு பிரிவில் உள்ள காக்கிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்களாம். கணக்கு காட்ட திருட்டு மது விற்பனையாளர்களை அழைத்து பேசி தினமும் இத்தனை பாட்டில் வேண்டும். இத்தனை ஆள் வேண்டும் என கூறுகிறார்களாம். திருட்டு மது வியாபாரம் தடையில்லாமல் நடக்க அவர்கள் கேட்கும் ஆட்களையும், பாட்டில்களையும் கொடுத்து கணக்கு காட்டுவதுடன், மாமூல் தொகையும் தடையில்லாமல் கொடுத்து விடுகிறார்களாம்.

இதனால் இந்த மாவட்டத்தில் திருட்டு மது தடுப்பு பிரிவில் எப்போதும் காசு மழையாகத்தான் இருக்காம். இந்த பிரிவில் பணியாற்ற இப்போது கடும் போட்டியும் ஏற்பட்டு உள்ளதாக பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சி நிர்வாகிகள் ஒரே தடுமாற்றமா இருக்காங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தல்ல தேனிக்காரர் தாமரை கட்சி பக்கம் போறதுக்கு முடிவு எடுத்திருக்காராம். ஆனா கட்சியின் சின்னம் இல்லாம அவரு எங்க போனாலும் உரிய மரியாதை கிடைக்காது.

இப்படி இருக்குறப்போ அவர நம்பி போனா நம்ம கதி என்னவாகும்னு தேனிக்காரரை நம்பி வந்தவங்க, இப்போ ஏதாவது கட்சியில இருக்கிறோமா, இல்லையானு தெரியாம தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்களாம். அதேபோல சேலம்காரர் கதியும் என்னவாகப்போகுதுன்னு தெரியல. வருகிற நாடாளுமன்ற எலக்‌ஷனுக்கு அப்புறம்தான் அவரு நிலைப்பாடு முழுமையாக தெரியவரும். இதுனால இலைக்கட்சி பக்கமே இனி போறது வேஸ்ட், மொத்தமா ஆதரவாளர்களை திரட்டிக்கிட்டு வேறு கட்சிக்கு போய்ட வேண்டியதுதான்னு நிர்வாகிங்க மத்தியில பேச்சு பரபரப்பா அடிபடுது’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு