டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகாவிற்கு கண்டனம்

கும்பகோணம்: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவதால் குருவை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா மற்றும் கர்நாடகாவுக்கு அழுத்தம் தராத ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி காவேரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து எல்.ஐ.சி அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

கும்பகோணம் தலைமை தபால் அலுவலகம் முன்பு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முன்பாக நடந்த மறியல் போராட்டத்தில் விவசாய அமைப்புகளுடன் இணைந்து அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடகாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். நாகையில் திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் என 2000 மேற்பட்டோர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி