டெல்லி குடிநீர் வாரிய முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலின் செயலாளர் வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவாலின் தனி செயலாளர், ஆம் ஆத்மி பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. டெல்லி குடிநீர் வாரியத்துக்கு மின்காந்த மீட்டர் வாங்குதல், பொருத்துதல், பழுது பார்த்தல் பணிகளுக்கு என்கேஜி இன்ஃப்ராஸ்டரக்சர்ஸ் நிறுவனத்துக்கு டெல்லி குடிநீர் வாரியம் ஒப்பந்தம் வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரண நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ஜெகதீஷ் குமார் அரோரா, ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வால் ஆகியோரை பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை கடந்த 31ம் தேதி கைது செய்தது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார், டெல்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினரும், பொருளாளருமான என்.டி.குப்தா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். இதேபோல் ஆம் ஆத்மி பிரமுகர் சிலரது இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா? என்பது குறித்து அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது