டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு ரூ.2 கோடி போதைப்பொருள் கடத்திய இருவர் சிக்கினர்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு ரயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் அதிகளவில் கடத்தப்படுவதாக, அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பூந்தமல்லி பகுதியில் நேற்று மாலை சந்தேகத்திற்கு இடமாக அரசு பஸ்சில் பயணம் செய்த இருவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட கேட்டமைன் என்ற விலை மதிப்புள்ள போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், பிடிபட்ட நபர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (45), ராம்குமார் (25), என்பதும், டெல்லியில் இருந்து கேட்டமைன் என்ற போதைப் பொருளை ரயில் மூலம் கடத்தி வந்து நாகப்பட்டினத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 30 கிலோ கேட்டமைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் ரயில் மூலம் கேட்டமைன் போதை பொருளை கடத்தி வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்றால் போலீசார் சோதனையில் சிக்கி கொள்வோம் என்பதற்காக போலீசாரிடம் சிக்காமல் இருக்க அம்பத்தூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பூந்தமல்லி கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்