டெல்லியில் மூத்த தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டார் பாஜவில் சேருகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? அரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகளால் தள்ளிப்போகிறது

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜவில் சேர திட்டமிட்டு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும், 2 மாநில தேர்தல் முடிவுகளால் அந்த திட்டம் தள்ளிப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தான்தான் அதிமுக என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது ஏன் அதிமுக கரை போட்ட வேட்டியைக் கூட கட்டக்கூடாது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஆனாலும் அதிமுக தனது கைக்கு வரும் என்று தொடர்ந்து கனவு கண்டு வருகிறார்.

ஆனால் அந்தக் கனவுக்கு எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட சம்மதிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார் பன்னீர்செல்வம். இதைத் தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவருடன் இருந்தவர்களை கொஞ்சம், கொஞ்சமாக இழுத்து விட்டார். கடைசியில் இருப்பவர்களும் சென்று விடக்கூடாது என்பதற்காக விரைவில் கட்சி ஒன்றிணையும் என்று கூறி வந்தார். ஆனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அவரை நம்பவில்லை. இந்தநிலையில் பாஜ தலைவர்களோ, அவரை தங்களுடைய கட்சியில் இணையும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பாஜ தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டார். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் அவர்களோ, இன்று காலையில் அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாவதால், அதற்கான பதற்றத்தில் உள்ளனர். அதற்கு காரணம், பாஜ ஆட்சியை பிடிக்காது என்று வெளியான தகவலே.

இந்த நேரத்தில் டெல்லியில் அவரை சந்திக்க அவர்கள் விரும்பவில்லை. இதனால் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பன்னீர்செல்வத்தின் சகோதரி, சிகிச்சை பெற்று வருகிறார். அவரை டெல்லியில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், சிறுநீரக பிரச்னை தொடர்பாக டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் சென்று சந்தித்துப் பேசினார். டெல்லி தலைவர்களை சந்திக்க அனுமதி கிடைக்காததால் இன்று அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை