அமித் ஷா வீடியோ விவகாரம்; தெலங்கானா முதல்வருக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்: செல்போனுடன் நாளை ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போலி வீடியோவை பகிர்ந்ததற்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அவரது செல்போனுடன் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை நீக்க வேண்டுமென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டம் ஒன்றில் பேசுவதாக ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் டிவிட்டர் கணக்கு மூலம் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ போலியானது எனவும், அமித் ஷாவின் பேச்சு வேண்டுமென்றே எடிட் செய்து மாற்றப்பட்டிருப்பதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் டெல்லி போலீசில் புகார் செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட 5 காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் அனுப்பினர். விசாரணைக்கு வரும் போது செல்போனையும் கொண்டு வர வேண்டுமென முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அசாமில் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப் பட்டு்ளளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தல் சமயத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு பயமில்லை
கர்நாடகாவின் சேடம் பகுதியில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், ‘‘தெலங்கானா முதல்வரும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவருமான என்னை கைது செய்யும் நோக்கத்துடன் நோட்டீஸ் தருவதற்காக ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு டெல்லி போலீஸ் வந்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற மோடி அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையுடன் சேர்த்து இப்போது டெல்லி போலீசையும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார். இந்த நோட்டீசுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். சட்டப்படி எதிர்கொள்வேன்’’ என்றார். இதற்கிடையே போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் செய்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு