டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான எம்எல்சி கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்களுக்கு எதிராக கவிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி கவிதாவின் வீட்டில் அமலாக்க இயக்குநரகத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் முதல் சோதனை நடத்தினர். அப்போது கவிதா மற்றும் அவரது உதவியாளர்கள் செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் கவிதாவுக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, கேசிஆர் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கவிதா கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிதா கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி