டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், ‘அடுத்த 2 நாளில் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன்.

டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என அதிரடியாக அறிவித்தார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக மூத்த பெண் அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அதையடுத்து ஆம் ஆத்மி சட்டமன்றக் கட்சியின் தலைவராக அடிசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும், அதிஷியும் ஒன்றாக சென்று டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்தனர். டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அதிஷி டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மக்கள் மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்த பிறகுதான் முதலமைச்சராக பதவியேற்பேன் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார். தான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டுத்தான் முதல்வர் பதவியில் மீண்டும் அமர்வேன் என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்