டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை, தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது : அமலாக்கத்துறை வாதம்

டெல்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தன்னை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,”ஆம் ஆத்மி கட்சியை அழிக்கும் சதித்திட்டத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது.

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. முதல்வரின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது, அமலாக்கத் துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல,”என வாதிட்டார். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, “கெஜ்ரிவால் மீதான விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை, தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது.

தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது எனக் கூறுவது மோசமான வாதம்; நாட்டை கொள்ளையடித்தாலும், தேர்தல் வருவதால் கைது செய்யக்கூடாது என பேசுவது தவறு.போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா?; முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்,”இவ்வாறு வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு