எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.. அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்ட விரோதமானவை. பொய்யானவை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி : ஆதாரமற்ற பொய் வழக்கு என்பதால் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஏற்கனவே இரண்டு விசாரணைகளுக்கும் ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்திருந்தார்.இந்நிலையில் அமலாக்கத்துறை அனுப்பிய 3வது சம்மனை ஏற்று முதல்வர் கெஜ்ரிவால் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 3வது முறையாக விசாரணையை புறக்கணித்தார்.இதையடுத்து அவரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி மதுபான முறைகேடு புகார் தொடர்பாக எனக்கு அமலாக்கப்பிரிவு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை பயன்படுத்தி என்னை கைது செய்ய பாஜக அரசு விரும்புகிறது. அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்ட விரோதமானவை. பொய்யானவை. அமலாக்கப்பிரிவு அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமானதாக இருந்தால் ஒத்துழைக்கத் தயார். பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதம். பாஜகவினர் ஊழலில் ஈடுபட்டால் ஒன்றிய விசாரணை அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. வரும் தேர்தலில் நான் பிரசாரம் மேற்கொள்வதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது. மக்களவைத் தேர்தல் வரவுள்ள நேரம் பார்த்து அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்புவது ஏன்?. நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. நேர்மையான அரசியல்வாதிகளை ஒன்றிய பாஜக அரசு சிறையில் தள்ளுவது கண்டனத்திற்குரியது. பாஜகவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி