டெல்லியின் ஒரே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்: புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி

டெல்லி: டெல்லியின் ஒரே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். தமது நேர்மையை நிரூபிக்கும் வகையில் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டால் தான் முதலமைச்சர் பதவியை ஏற்பேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்றது. இதில் தற்போது அமைச்சராக இருக்கும் அதிஷி-யை முதலமைச்சராக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பொதுப்பணித்துறை, நிதி, கல்வி என முக்கிய 6 இலாக்களை அதிஷி கவனித்து வருகிறார்.

மேலும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆம் ஆத்மி-யின் முக்கிய தளவைகளான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் இருந்தபோது கட்சியின் முகமாக அதிஷி மாறிய நிலையில், தற்போது அவர் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதுடன், சட்டமன்ற குழு தலைவராக அதிஷி தேர்வு செய்யப்பட்ட கடிதத்தையும் வழங்க உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, “டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான். கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வர் ஆக்குவதே எங்களின் இலக்கு. சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது வைத்த நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை முதலமைச்சராக நான் ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுவேன் என்பதை டெல்லி மக்களுக்கும், சக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது என்னுடைய ஒரே இலக்கு, டெல்லி மக்களைப் பாதுகாத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவதுதான்” என்று அவர் கூறினார்.

Related posts

போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது

ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!!

தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்