9 மணி நேரம் தாமதம் விமானியை தாக்கிய பயணி: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: விமானம் புறப்பட 9 மணி நேரம் தாமதம் ஆனதால் விமானியை, பயணி ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானம், இந்த பனிமூட்டத்தால் புறப்படாமல் இருந்தது. இதனால் பல மணிநேரமாக பயணிகள் அதில் காத்திருந்தனர். இந்த சூழலில், அந்த விமானத்தில் ஏற்கனவே இருந்த விமானியும், விமானக் குழுவினரும் ஷிப்ட் முடிந்து சென்றனர். பின்னர், புதிய விமானக் குழுவினர் வந்தனர். அப்போது அவர்களுடன் வந்த விமானி, பனிமூட்டம் இன்னும் விலகாததால் விமானம் புறப்பட இன்னும் சில மணிநேரம் தாமதமாகும் எனக் கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பயணி ஒருவர், தனது இருக்கையில் இருந்து எழுந்து ஓடிச்சென்று, அந்த விமானியை பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விமானக் குழுவினரும், அங்கிருந்த பயணிகளும் கூச்சலிட்டனர். பின்னர் அவரை விமானக் குழுவினர் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, அவரை விமான நிலையக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் சஹில் கட்டாரியா என்பது தெரியவந்தது. விமானம் புறப்பட தாமதமானதால் கோபப்பட்டு விமானியை அறைந்ததாக அவர் கூறியதாக தெரிகிறது. காலை 7:40 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பலமுறை தாமத அறிவிப்புக்கு பின்னர் மாலை 05:35 மணிக்கு புறப்பட்டது .

இதுகுறித்து அதே விமானத்தில் பயணித்த சனல் விஜ் என்பவர்,’ காலை 7.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பகல் 12:20 மணியளவில் 5 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ஏறக்குறைய 186 பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். தாமதமான குழு உறுப்பினர் மதியம் 2:40 மணிக்கு வந்தார். இதையடுத்து விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. இருப்பினும் புறப்படவில்லை. இதனால் தகராறு ஏற்பட்டது. மதியம் 3:20 மணியளவில், தாக்குதல் நடந்தது. இந்தவிவகாரத்தில் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் இண்டிகோவின் தவறான நிர்வாகத்திற்கு என்ன பதில் அளிப்பார்கள் ’ என்று கேள்வி எழுப்பினார்.

* ஏர்போர்ட் ஓடுதளத்தில் சாப்பிட்ட பயணிகள்
டெல்லி பனிமூட்டத்தால் கோவாவில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியதும், அதில் இருந்து இறங்கிய பயணிகள் ஓடுபாதைக்கு அருகில் உள்ள டார்மாக் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். இந்த வீடியோ வைரல் ஆனதால் மும்பை விமான நிலையம் மீது, இண்டிகோ விமான நிறுவனம் மீதும் புகார் எழுந்தது. விளக்கம் கேட்டு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!