டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை; டிச.1ல் தேர்வு

சென்னை: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2025 பருவத்தில் 8ம் வகுப்பில் மாணவர்கள்(சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் சென்னை உட்பட குறிப்பிட்ட சில மையங்களில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூ.600ம் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்களின்(சிறுவர் மற்றும் சிறுமியர்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1-7-2025 அன்று 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 2-7-2012க்கு முன்னதாகவும் 1-1-2014க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது.
விண்ணப்பதாரர் ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1-7-2025ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்(இரட்டிப்பு படியுடன்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை 600003 என்ற முகவரிக்கு 30.9.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளம் www.rimc.gov.in-ல் பார்க்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு