டேராடூனில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு பிரதமர் மோடிக்கு அழைப்பு: உத்தரகாண்ட் முதல்வர் தாமி சந்திப்பு

புதுடெல்லி: டேராடூனில் வரும் 8ம் தேதி உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடியை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அம்மாநில அரசு சார்பில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநாட்டை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அப்போது, உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்க உதவியதற்காக அவர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது, மாநில வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் தாமி பல்வேறு கோரிக்கைகள் விடுத்தார். குறிப்பாக, பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ், ஜமராணி அணை திட்டத்தை இணைத்து ரூ.1,730.21 கோடி நிதி ஒதுக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், சாங்க் அணை குடிநீர் திட்டத்திற்காக ரூ.2,460 கோடி நிதி உதவி வழங்கவும், ஜோலி கிராண்ட் விமானத்தை தரம் உயர்த்த ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்கவும் முதல்வர் தாமி வலியுறுத்தினார்.

ஹரிதுவாரில் உள்ள ரிஷிகுல் ஆயுர்வேத கல்லூரி வளாகத்தில் அகில இந்திய ஆயுர்வேதா இன்ஸ்டிடியூட் நிறுவவும், உத்தரகாண்ட்டில் நியூசிலாந்துடன் இணைந்து கிவி சாத்தியக்கூறு ஆய்வு மையம் அமைக்கவும் ஒப்புதல் தர வலியுறுத்தினார். இதுதவிர 3 சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டிற்கான அனுமதியை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிடவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை