பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது பணம் சம்பாதிக்க மாணவர்கள் பஞ்சர் கடை திறக்க வேண்டும்: மபி பா.ஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

குணா: பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது என்பதால், பணம் சம்பாதிக்க கல்லூரி படித்த மாணவர்கள் பஞ்சர் கடை திறக்க வேண்டும் என்று மபி பா.ஜ எம்எல்ஏ பன்னாலால் ஷக்யா தெரிவித்தார். மத்தியபிரதேச மாநிலத்தில் 55 மாவட்டங்களில் பிஎம் காலேஷ் ஆப் எக்ஸலன்ஸ் கல்லூரிகளை இந்தூரில் இருந்து இணையவழியாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். குணா மாவட்டத்தில் நடந்த விழாவில் பா.ஜ எம்எல்எ பன்னாலால் ஷக்யா கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பங்கேற்ற அவர் கூறுகையில்,’ நாங்கள் பிஎம் எக்ஸலன்ஸ் கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் வாழ்வாதாரத்திற்காக பணம் சம்பாதிக்க மோட்டார் சைக்கிள் பஞ்சர் ரிப்பேர் செய்யும் கடையைத் திறக்க வேண்டும். மபியில் நேற்றுமுன்தினம் மெகா மரக்கன்றுகள் நடும் இயக்கம் நடத்தப்பட்டது. ​​24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. மக்கள் மரங்களை நடுகிறார்கள்.

ஆனால் அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஆர்வம் காட்டவில்லை. மனித உடலை உருவாக்கும் பூமி, காற்று, நீர், சூரிய ஆற்றல் மற்றும் வானம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து கூறுகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழலில் கவலை உள்ளது. ஆனால் யாரும் இந்த திசையில் செயல்படவில்லை. நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாப்போம் என்பது கேள்விக்குறி. எனவே அவை வளர உறுதி செய்வோம்’ என்றார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி