நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆப்கானிடம் அதிர்ச்சி தோல்வி

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. அருண் ஜெட்லி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. குர்பாஸ், இப்ராகிம் இணைந்து ஆப்கானிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இப்ராகிம் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய குர்பாஸ் இங்கிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். குர்பாஸ் 33 பந்தில் அரை சதம் அடித்து அசத்த, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்தது. இப்ராகிம் 28 ரன், ரகமத் ஷா 3 ரன் எடுத்து அடில் ரஷித் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குர்பாஸ் 80 ரன் (57 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். 8 ரன்னுக்கு 3 விக்கெட் விழுந்ததால் ஆப்கான் திடீர் சரிவை சந்தித்தது.

கேப்டன் ஷாகிதி 14, உமர்ஸாய் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினர். முகமது நபி 9 ரன் எடுத்தார். இக்ரம் ரஷித் கான் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தனர். ரஷித் 23 ரன்னில் வெளியேற, இக்ரம் முஜீப் ஜோடி அதிரடியாக 44 ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியது. இக்ரம் 58 ரன் (66 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), முஜீப் உர் ரகுமான் 28 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, நவீன் உல் ஹக் 5 ரன்னில் ரன் அவுட்டானார். ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 284 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடில் ரஷித் 3, வுட் 2, டாப்லி, லிவிங்ஸ்டன், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பேர்ஸ்டோ, மலான் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ 2, ஜோ ரூட் 11 ரன்னில் ஆட்டமிழக்க, ஓரளவு தாக்குப்பிடித்த மலான் 32 ரன் எடுத்து முகமது நபி பந்துவீச்சில் இப்ராகிம் வசம் பிடிபட்டார்.

ஒரு முனையில் ஹாரி புரூக் உறுதியுடன் போராட… கேப்டன் பட்லர் 9 ரன், லிவிங்ஸ்டன், சாம் கரன் தலா 10 ரன் எடுத்து அணிவகுத்தனர். வோக்ஸ் 9, ஹாரி புரூக் 66 ரன் (61பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), அடில் ரஷித் 20 ரன், மார்க் வுட் 18 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 40.3 ஓவரில் 215 ரன்னுக்கு சுருண்டது. டாப்லி 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கான் பந்துவீச்சில் முஜீப், ரஷித் தலா 3, நபி 2, பரூக்கி, நவீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆப்கான் அணி 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related posts

என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல்

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை: எடப்பாடி பேட்டி

பைக்குகள் மோதலில் மாணவன், முதியவர் பலி