தமிழ்நாட்டில் தொடர் தோல்விக்கு பிறகும் பாஜ அரசு இன்னும் பாடம் கற்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தர்மபுரி: தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்விக்குப் பிறகும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை. மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக்கூட மனமில்லாமல் இருக்கிறது என தர்மபுரியில், ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசு நிர்வாகத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், `மக்களுடன் முதல்வர்’ என்னும் திட்டத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி கோவையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, மக்களின் மனுக்களை நேரடியாக பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த திட்டத்தை ஊரகப்பகுதி மக்களுக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாக சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று பெயர் வைத்தோம்.

என்னுடைய தொகுதியான கொளத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன். “இவர்கள் ஆட்சிக்கு வரப்போவது இல்லை” என்று இறுமாப்பில் கேலி, கிண்டல் செய்தார்கள். ஆனால், அந்த கேலி மனிதர்களை தோற்கடித்து, எங்களுக்கு பெரிய வெற்றியை தேடி தந்தீர்கள். ஆட்சிக்கு வந்ததும், உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதிதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையின் பெயர் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’. என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறை வாரியாக பிரித்தோம்.

அதிலிருந்து, நடைமுறை சாத்தியம் உள்ள 2,29,216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல் தான், கடமை தொடங்குகிறது என்று நினைத்து, உழைப்பை கொடுத்தோம். அதனால்தான், தொடர்ந்து மனுக்களை பெற்றோம். அதை முறைப்படுத்தினோம்.

எப்படியெல்லாம் முறைப்படுத்தினோம் என்று சொல்ல வேண்டுமென்றால், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை என்று எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ‘‘முதல்வரின் முகவரி’’ என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கினோம். பொதுமக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களின் பார்வையில் இருந்து தவறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம்.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மட்டுமில்லாமல், இணையதளம், அஞ்சல், சமூக வலைதளம், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தரப்படும் மனுக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள், இதுபோல, எல்லா மனுக்களும் ஒரே இடத்திற்கு சென்று சேர்கிறது. மக்களால் தரப்படும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம். மக்களின் அனைத்து கோரிக்கைகளும் தலைமை செயலகத்திற்கு வந்துவிடுகிறது.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின் கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68,30,281 மனுக்களில் 66,25,304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம். அதிலும், இந்த தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், 72,438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நான் சொன்னது எல்லாம் நீங்கள் அரசு துறையின் அலுவலர்களிடம் சென்று மனுக்களை கொடுத்தது பற்றி, ஆனால் அந்த நிலையை மாற்றி பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியமான 15 அரசு துறைகள், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களாகிய உங்களிடம் உங்கள் ஊரிலேயே மனுக்களை பெற்று பதிவு செய்து, அதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நான் உத்தரவிட்டேன். அதன்படி உருவானது தான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.

முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்கள் மூலம் பெறப்பட்ட சுமார் 8.74 லட்சம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். தர்மபுரி மாவட்டத்தில் நகரப்பகுதிகளில், 3,107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்த திட்டம் மக்களுக்கு பயனளிக்க தொடங்கிய காரணத்தால்தான், இப்போது ஊரக ஊராட்சிகளுக்கும் விரிவு செய்திருக்கிறோம்.

“மக்களிடம் செல், மக்களை பற்றி அறிந்து கொள், மக்களுக்காக செயல்படு’’-இதுதான் அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு சொன்னது. அந்த அடிப்படையில்தான், மக்கள் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக, நேரடியாக அவர்களை சந்தித்து பேசும் பொழுதும் நான் உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒன்றிரண்டு கடிதத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதியிருந்த மனுவுக்கு, ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் தீர்வு கண்டோம்.

அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதத்தில், இதய நோயாளியான அவர்களுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனையிலேயே கிடைத்துவிடுவதாகவும், ஆனால், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியே வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த மாத்திரையின் விலை, ஒரு அட்டை 215 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை என்று, ஒரு மாதத்திற்கு 60 மாத்திரை சாப்பிடவேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் கொடுக்கும் 1000 ரூபாய் இதற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், கடந்த 8 மாதமாக, இந்த தொகையில் தான் மருந்து வாங்குவதாகவும் அந்த கடிதத்தில் சொல்லியிருந்தார்.

அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேதமுத்து என்பவர் எழுதிய கடிதத்தில், கடந்த 20 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த கைலாசபுரம்-செட்டியூரனி சாலையை சீரமைத்து கொடுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார். அதேபோன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக ‘யாருக்கும் எந்த குறையும் இல்லை’ என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய் பிரசாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை.

தங்களின் 10 வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை. ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளை கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். திமுகவை பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில், தர்மபுரி மாவட்டத்தில் ரூ.444 கோடியே 77 லட்சம் செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 2,637 பயனாளிகளுக்கு ரூ.56 கோடியே 4 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முதல்வர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்திற்கான 15 புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் சாந்தி, எம்பி ஆ.மணி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுரவ்குமார், டிஆர்ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை கலெக்டர் தனப்பிரியா, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் செல்வம், எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* மக்களுக்கு 44 சேவைகள்
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் எரிசக்தித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்பட 15 அரசுத் துறைகள் மூலம் மக்களுக்கு 44 சேவைகள் வழங்கப்படுகின்றன.

Related posts

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி!

இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி!

வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்: பிரதமர் மோடிக்கு அனுப்பினார்