அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: அவதூறு வழக்கில் வரும் 7ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த பாஜக அரசை, பொதுப் பணிகளில் 40 சதவீத கமிஷன் பெறும் அரசு என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ‘கட்டணம் செலுத்தவும்’ என்று தெரிவித்து, அதற்கான ‘க்யூஆர் கோட்’ அடங்கிய சுவரொட்டிகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

இதையடுத்து பொய் விளம்பரங்களை வெளியிட்டதாக பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் மீது பாஜக பொதுச் செயலர் கேசவ் பிரசாத் அவதூறு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் ராகுல்காந்தி, மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அதேவேளையில், அடுத்த விசாரணையின்போது ராகுல் காந்தி கட்டாயம் நேரில் ஆஜராவார் என்று காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர். இதையடுத்து வரும் 7ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது