அவதூறாக பேசிய வழக்கை ரத்துசெய்யக்கோரிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிறுபான்மையினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கை ரத்துசெய்யக்கோரிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அண்ணாமலை மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்கலாம் என ஆணையிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடாது என கிருஸ்தவ, முஸ்லீம்களின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தக்கல் செய்து, குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரிந்த்த சேலம் நீதிமன்றம் அந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும் படி அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு இடைகால தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.சந்திரன் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கின் புகார் தாரரான சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும், அண்ணாமலையின் பேச்சு என்பது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியிருப்பதாகவும், அந்த வெறுப்புணர்வு பேச்சு என்பது உடனடியான விளைவுகளை ஏற்படுத்த அவசியம் இல்லை என்றும், ஆனால் பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என்று கடுமையான வாதத்தை முன்வைத்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இன்று வழங்கபட்ட தீர்ப்பில் அண்ணாமலை மீதன வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை மீதான வழக்கில் கீழமை நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு தொடந்து நடத்தலாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்பளித்துள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!