சிமி இயக்கத்தை சட்ட விரோத அமைப்பாக அறிவித்தல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட் நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம்: குன்னூரில் விசாரணை துவங்கியது

ஊட்டி: சிமி இயக்கத்தை சட்ட விரோத அமைப்பாக அறிவித்தல் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம் குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று விசாரணையை துவக்கியது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (உபா) 1967ன் 3(1) பிரிவின்படி சிமி எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை ஒரு சட்ட விரோத அமைப்பாக அறிவித்து இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.

இந்த அறிவிக்கை தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று தீர்ப்பாய விசாரணை துவங்கியது.  விசாரணைக்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருசைந்திர குமார் கௌரவ் நேற்று காலை வந்தார். முக்கியமான தீர்ப்பாயம் என்பதால் இவ்விசாரணை நடைபெறும் குன்னூர் நகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தினர்.

அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். தொடர்ந்து, நகர்மன்ற கூட்ட அரங்கில் விசாரணை துவங்கியது. சிமி இயக்கம் குறித்து சாட்சியம் அளிக்க விரும்புகின்றவர்கள் உறுதிமொழி பத்திரங்களை தாக்கல் செய்யலாம் எனவும், குறுக்கு விசாரணை ஏதேனும் இருப்பின் அதற்காக நேரில் ஆஜராகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தீர்ப்பாய விசாரணைக்கு சாட்சியமளிக்க யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்றும் தீர்ப்பாயம் நடைபெற உள்ளது.

Related posts

தீவிரவாதிகளுக்கு உதவியவர் எம்பியாக பதவியேற்க என்ஐஏ ஒப்புதல்: நீதிமன்றம் இன்று உத்தரவு

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எம்பிக்கள் இருக்கையில் உள்ள மைக் ஆப் செய்யும் சுவிட்ச் என்னிடமில்லை: மக்களவை சபாநாயகர் தகவல்