சென்னை கடற்கரை – வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க முடிவு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

சென்னை: ‘‘தமிழக அரசு கேட்கும்போது சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்’’ என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை தெற்கு ரயில்வேயிடம் இருந்து கையகப்படுத்தி ரயில் சேவையை மேம்படுத்தி இயக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக வணிக திட்ட அறிக்கையை தயார் செய்ய ஆலோசகரை நியமிக்க சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ளன.

குறிப்பாக, திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, ஆகிய உள்ளிட்ட இடங்களை இணைக்கிறது. சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் ரயில் இயக்கம் முதல் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இந்த ரயில் சேவையை தமிழக அரசு எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிக்கு பின் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களிடம் கூறியதாவது: தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 1200 இடங்களில் 12 ஆயிரம் பேர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பறக்கும் ரயில் வழிதடமான சென்னை கடற்கரை – வேளச்சேரி

எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது வணிக திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு எப்போது வேண்டும் என்று கேட்கிறார்களோ. அப்போது எம்ஆர்டிஎஸ் வழித்தடம் முழுவதுமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும். வைகை விரைவு ரயிலை பொறுத்தவரையில் பயணிகளின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு நேரம் மாற்றி அமைக்கப்படும். மற்றபடி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும். வந்தே பாரத் அதிவிரைவு ரயிலில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் படுக்கை வசதி கொண்ட சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்