கடன் கொடுத்த நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்; தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான வீடியோ, கடிதம் சிக்கியது

பேரணாம்பட்டு: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டிய நிலையில், கடன் தொல்லையால் செல்போனில் உருக்கமான வீடியோ பதிவிட்டும், கடிதம் எழுதி வைத்தும் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியை சேர்ந்தவர் அன்சர்(58), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மும்தாஜ்(50). இவர்களது மகன் இம்ரான்(24), வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ஷாவுக்கும் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. அர்ஷா 5 மாத கர்ப்பிணியாக உள்ளதால் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்சர் பல இடங்களில் கடன்கள் வாங்கி உள்ளார். அதை திரும்ப செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அவர் சில நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அன்சர் கடன் பெற்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வந்து கடன் தொகையை செலுத்தும்படி மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மும்தாஜ், மகன் இம்ரான் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தனர். நேற்று மதியம் 12 மணி ஆகியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இம்ரான்,அவரது தாய் மும்தாஜ் ஆகிய இருவரும் மின்விசிறிகளில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். தகவலறிந்து பேரணாம்பட்டு போலீசார் வந்து விசாரித்தனர். இம்ரானின் செல்போனை ஆய்வு செய்ததில் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதில், ‘நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை. என்னிடம் கடன் ெதாகையை கேட்டு தொந்தரவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? கடன் கொடுத்தவர்கள் என் அப்பாவிடம் கேளுங்கள். ஆனால் என்னை தொந்தரவு செய்வதால் வாழ முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும் மும்தாஜ் எழுதிய கடிதத்தில், ‘கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்யும் நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் கும்பலாக வந்து எங்களை மிரட்டினர். இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதி வைத்துள்ளார். இதன்படி அவர்களை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்