கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

தகுந்த ஆலோசனைகள் இல்லாமல் கடன் வாங்கினால் கழுத்தையும் நெரிக்கும் என்பது உண்மைதான். வங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் நாம் கடன் வாங்க, எப்படியும் இந்த கடனை அடைத்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் வாங்குவோம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த கடனை அடைக்க முடியாமல் போய்விடும் அல்லது தாமதமாகும்.இன்னும் பல வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்களை கிட்டத்தட்ட குற்றவாளிகள் போல் மிரட்டுவதும், திட்டுவதும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதும் கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் கையெழுத்து போட்டுக் கொடுத்த கடன் பத்திரத்தில் இவை அனைத்துமே இருக்கும் என்பதுதான் நாம் கவனிக்க மறந்த முக்கிய அம்சம். எனவேதான் கடன் வாங்கும் முன் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் அத்தனை ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள், பிறகு முடிவெடுங்கள். உங்கள் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்.வட்டி விகிதம், கடனைத் திரும்ப செலுத்தும் காலம் மற்றும் லோன் குறித்த பிற விஷயங்களை வங்கி அதிகாரிகள் பல சமயங்களில் அதிகப்படுத்திக் கூறுவார்கள். லோன் வாங்கிய பிறகு குழப்பம் அடையாமல் இருக்க வேண்டுமென்றால், முதலிலேயே லோன் ஒப்பந்தத்தை முழுமையாக தகுந்த விவரங்கள் அறிந்த நண்பர்களின் உதவியுடன் தெரிந்துகொள்வது அவசியம்.

லோன் வாங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் முழுமையாகக் கூற வேண்டும் என விதிகள் இருந்தாலும், வாங்கிய கடனை அடைக்க முடியாவிட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அதிக வட்டியை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுவது குறித்தும் வங்கி அதிகாரிகள் எதுவும் கூறுவதில்லை. லோனை முன்கூட்டியே அடைக்க விரும்பினால் கட்ட வேண்டிய அபராதம் குறித்தோ அல்லது லோன் வாங்கும் போது கட்ட வேண்டிய பிராஸசிங் ஃபீஸ் குறித்த எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிப்பதில்லை. இதில் பெரும் பிரச்னை பெர்சனல் லோன்கள்தான். பெரும்பாலும் வீடு, வாகனம், சொத்து, நகை இவைகள் மூலம் அல்லது இவைகளுக்காக வாங்கும் கடன்களுக்கு ஆதாரமாக நம் கண்முன்னே அசையும், அசையா சொத்துக்கள் இருக்கும். ஆனால் பெர்சனல் லோன்கள் பெரும்பாலும் அந்த சமயத்தில் இருக்கும் ஏதோ ஒரு பிரச்னைக்காக நான்கு வருடங்கள் மாதத் தவணைகளில் மாட்டிக்கொள்வோம். கடன் வாங்கி செலவழித்து வெறும் ஆறு மாதங்களில் கூட எதற்கு வாங்கினோம் என பலரும் மறந்து வருடம் முழுக்க தவணை கட்டியே மன உளைச்சலுக்குத் தள்ளிவிடும். இதனாலேயே பெர்சனல் லோன் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்
.
சில வங்கி அதிகாரிகள் கடன் வாங்கும் ஆவணங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விதிகளை சேர்க்கின்றனர். நம்மால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் அந்த ஆவணங்களை தயாரித்து நம்மிடம் கையொப்பம் வாங்குகிறார்கள். லோன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் லோன் விவரங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க விடாமல் பரபரப்புக் காட்டிக் கையெழுத்து வாங்கும் வேலைகளில் சில வங்கி அதிகாரிகள் ஈடுபடுவதும் வழக்கமாகி வருகிறது. ஒப்பந்தத்தை வாசிக்க போதுமான நேரத்தை வழங்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பொறுமையாக வாசித்து, ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர்களிடம் அதுகுறித்து கேளுங்கள்.நீங்கள் வங்கியில் விண்ணப்பிக்க முடிவு செய்திருந்தால், இது போன்ற தடைகள் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடுவதற்கு முன்அதை நன்றாக வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.லோன் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, எத்தனை வகைகளில் லோன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு லோனின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன போன்ற விவரங்களை ஆய்வு செய்யுங்கள். எந்த லோனை எடுத்தால் உங்களுக்கு சரியாக இருக்கும் என முடிவெடுக்க இது உதவியாக இருக்கும்.

லோன் வாங்குவதற்கு முன் அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் கீழ் ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். லோன் வாங்குவதற்கு நன்கு பிரபலமான வங்கியை எப்போதும் நாடுங்கள்.லோன் ஒப்பந்தம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால், நிதி ஆலோசகர் அல்லது வழக்கறிஞரிடம் ஆலோசனை கேளுங்கள். லோன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அவர்கள் உங்களுக்கு எளிமையாக விளக்குவார்கள்.உங்களுக்கு வரும் முதல் லோன் சலுகையை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். வட்டி விகிதம், கட்டணம், விதிகள், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் போன்றவை வேறு பல வங்கிகளில் எப்படியிருக்கிறது என ஒப்பிட்டுப் பாருங்கள்.

எந்தவொரு லோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பும் அதை முழுமையாக படியுங்கள். இதில்தான் லோன் குறித்த விவரங்கள், விதிகள், நிபந்தனைகள், வட்டி விகிதம், திரும்ப செலுத்த வேண்டிய காலம் என அனைத்தும் இருக்கும்.லோன் குறித்து உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றால், வங்கியிடம் அதுகுறித்த விவரங்களை கேட்கத் தயங்காதீர்கள். வங்கி துறை உள்பட பல துறைகளில் தற்போது பல விதமான மோசடிகள் நடந்துவந்தாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் சட்டத்திற்கு உட்பட்டும் அறநெறிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்கிவருவதை மறந்துவிடாதீர்கள். மோசடிகள் நடைபெறாத வகையில் ரிசர்வ் வங்கியும் ஒழுங்குமுறை அமைப்புகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.லோன் வாங்கும்போது ஏதாவது சந்தேகம் படும்படியாகவோ அல்லது மோசடியாக நடந்துகொண்டால் அல்லது உங்களுக்கே தெரியாமல் வங்கியில் பரிவர்த்தனை செய்வது தெரிய வந்தால், உடனடியாக சம்மந்தபட்ட வங்கியிடமும் மற்றும் ரிசர்வ் வங்கி அல்லது காவல்துறையிடமும் புகார் தெரிவியுங்கள். கடன் செயலிகளை கூடுமானவரை நம்பி ஏமாற வேண்டாம். கொடுப்பது சொற்ப தொகை ஆனால் அவர்கள் மீண்டும் வசூலிக்கும் முறையும், தொகையும் நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். அங்கீகரிக்கப்பட்ட கடன் செயலிகள் கூட இதில் விதிவிலக்காக இல்லை. வட்டி விகிதமும் அதிகம், மேலும் இவர்கள் நம் கைப்பேசியுடன் முழுமையாக தொடர்பில் இருப்பதால் ஒரு மாதம் தவணை கட்டத் தவறினாலும் நம் தொடர்புப் பட்டியலில் இருக்கும் அத்தனை பேருக்கும் கடன் குறித்த கேள்விகளும், விசாரிப்புகளும் செல்லும். தேவையில்லாமல் நண்பர்கள், உறவுகள் மத்தியில் மரியாதை இழக்க நேரிடும். குறிப்பாக இதில் சிக்கிக் கொள்பவர்கள் குடும்பத் தலைவிகள்தான். சிறு தொகைதானே அடுத்த மாத சேமிப்பில் இருந்து கட்டிவிடுவோம் என பல பெண்கள் இதில் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். எதுவாயினும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். கடன் வாங்கும் முன் ஆயிரம் முறை கூட யோசியுங்கள், ஏனெனில் ஒருமுறை வாங்கிவிட்டால் பின் யோசிக்க நேரமே இல்லாமல் வசூலிக்கும் அதிகாரிகள் நம் நிம்மதியைக் குலைப்பார்கள். கடன் வாங்கும் முன் கவனம் தேவை.

– பொ. பாலாஜிகணேஷ்.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து