கடன் தொல்லை பிறந்த நாளில் வாலிபர் தற்கொலை

குளச்சல் அருகே பரபரப்பு

குளச்சல் : குளச்சல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் ஒன்றரை வருடத்திற்குள் கடன் தொல்லையால் தனது பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தினேஷ் பாபு (31). அந்த பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் தொழிலாளர்களை வைத்து தையல் ஆரி (அலங்கார) வேலை செய்து வந்தார். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சாந்தி (29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தினேஷ் பாபுவுக்கு தொழிலில் அதிக அளவில நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தினேஷ் பாபு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் பாக்கி வைத்து உள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே மனைவி சாந்தி உடல் நலம் சரி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று சாந்தி கணவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் உறவினர்கள் நேற்று காலை உடையார்விளை அபார்ட்மெண்ட்டுக்கு வந்து பார்த்தனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தினேஷ் பாபு தங்கி இருந்த அறையின் கதவு திறக்க வில்லை. உடனே ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது தினேஷ் பாபு மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்தவர் ஒன்றரை வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாளில் மரணம்

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த தினேஷ்பாபுவிற்கு நேற்று முந்தினம் 31 வது பிறந்த நாளாகும். மதியம் மனைவியின் வீட்டிற்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளின் போது மனைவிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். மாலை உடையார்விளைக்கு திரும்பி வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு