கொலை மிரட்டல் வழக்கிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: சிறைக்கு சென்று குறிப்பாணையில் கையெழுத்து

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொலை மிரட்டல் வழக்கிலும் நேற்று கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனது ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கரூர் டவுன் போலீசில் புகார் செய்திருந்தார்.

இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார். சார்பதிவாளர் கொடுத்த புகாரின்பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன்(28) ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் 16ம்தேதி சிபிசிஐடி தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கரூர் நீதிமன்றத்தில் இன்று (19ம்தேதி) அல்லது நாளை (20ம் தேதி) மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

கரூர் டவுன் போலீசில் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகார் தொடர்பாக போலீசார், விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து வாங்கல் போலீசார், திருச்சி மத்திய சிறையில் இருக்கும் விஜயபாஸ்கரிடம், கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பானை கடிதத்தில் நேற்று கையெழுத்து பெற்று சென்றனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு