பாஜ தலைவர் கொலை வழக்கில் பாப்புலர் பிரன்ட், எஸ்டிபிஐ கட்சிகளை சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை: மாவேலிக்கரை நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாஜ தலைவர் வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் பாப்புலர் பிரன்ட், எஸ்டிபிஐ கட்சிகளை சேர்ந்த 15 பேருக்கு மாவேலிக்கரை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ், பாஜ, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த யது கிருஷ்ணா கொல்லப்பட்டார்.

இதற்கு பழிக்குப்பழியாக ஒரு சில நாட்களிலேயே எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஷான் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு அடுத்த நாளே 2021 டிசம்பர் 19ம் தேதி பாஜ பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் வீடு புகுந்து தாய், மனைவி, மகள் கண்ணெதிரே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரன்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நைசாம், அஜ்மல், அனூப், முகம்மது அஸ்லம், சலாம், அப்துல் கலாம், சபருதீன், முன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகிர் உசேன், ஷாஜி மற்றும் ஷம்னாஸ் அஷ்ரப் ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டார். 15 பேரும் எந்த கருணையும் பெற வேண்டியவர்கள் அல்ல என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு