ஜம்முவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 22 பேர் பலி: 54 பேர் காயம்

ஜம்மு: ஜம்மு மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பக்தர்கள் பலியாகினர். 54 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டம் பூனி பகுதியில் உள்ள ஷிவ் கோரிக்கு புனித யாத்திரையாக அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் இருந்து சுமார் 75 பக்தர்கள் பஸ்சில் புறப்பட்டனர். இந்த பஸ் நேற்று பிற்பகல், ஜம்முவின் சவுகி சோரா பெல்ட்டில் உள்ள துங்கி மோர் மலைப்பாதையில் ஆபத்தான வளைவில் திரும்புகையில் எதிரே வந்த காருக்கு வழிவிட முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.சுமார் 150 அடி ஆழ மலையில் பஸ் உருண்டு விழுந்ததில் முற்றிலும் உருக்குலைந்தது.

பஸ்சிலிருந்து 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த 54 பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் 9 பேர் பெண்கள், 2 பேர் சிறுவர்கள் ஆவர். மேலும் காயமடைந்தவர்களில் 12 பேர் சிறுவர்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு