நாளை மறுதினம் குடியரசு தின விழா ரயில், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை

*மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் : நாளை மறுதினம் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரயில், பஸ் நிலையங்களில் வெடி குண்டு சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நாளை மறுதினம் (26ம்தேதி) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாக காவலர் அணிவகுப்பு மைதானத்தில் ஆட்சியர் பழனி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை, தீயணைப்பு, ஊர்காவல்படை உள்ளிட்டவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் அவர், பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனிடையே குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து, ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை மோப்பநாய் ராணி மூலம் சோதனை செய்யப்பட்டன. தென்மாவட்டங்களுக்கு சென்ற ரயில்களில் சோதனை நடத்தப்பட்டன. பயணிகள் சோதனைக்குப்பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். லாட்ஜிகள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்திய போலீசார் சந்தேக நபர்கள் இருந்தால் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.

மேலும் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. குடியரசுதின விழாவையொட்டி எஸ்பி தீபக்சிவாஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடியேற்றப்படும் காவலர் அணிவகுப்பு மைதானத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் மைதானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு பாதுகாப்பினை உறுதி செய்து வருகின்றனர்.

மது கடத்தலை தடுக்க எல்லைகளில் சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை தைபூசம், குடியரசு தின விழாவையொட்டி 25, 26ம் தேதி டாஸ்மாக், மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி மதுபாட்டில், சாராயம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?