விடியல் தந்த பயணம்

2021, மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமின்றி இலவச பயணத்திட்டத்தை அறிமுகம் செய்தார். அன்று விதையாக போட்டது, இன்று விருட்சமாக பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு அரசின் இலவச திட்டங்களை ஆதரிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், எதிர்ப்பதற்கும் சிலர் இருப்பார்கள். ஆனால், தமிழக அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தவர்களே அதிகம். காரணம், தினமும் 54 லட்சம் பெண்கள் இந்த பஸ்களில், கட்டணமின்றி பயணிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள், அரசு, தனியார் அலுவலக பெண் ஊழியர்கள், இல்லத்தரசிகள், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் இதில் அடக்கம்.

இதன்மூலம் ஒரு மாதத்துக்கு ரூ.550 முதல் ரூ.1,250 வரையும், சராசரியாக ரூ.888 வரை சேமிக்கப்படுகிறது. தமிழகத்தில் மாணவ, மாணவிகள் 15 சதவீதம், நடுத்தர வயது பெண்கள் 45 சதவீதம், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் 15 சதவீதம் என சுமார் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 88.87 கோடி, மதுரையில் சுமார் 30 கோடி, திருச்சியில் சுமார் 25.50 கோடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 4.31 கோடி பயணங்கள் என ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 490 கோடிக்கு மேல் இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ல் திட்டம் துவங்கியபோது, தினமும் சுமார் 35 லட்சம் பயணங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது தினமும் 55 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நிதியாண்டுகளில் இலவச பஸ் பயண திட்டத்திற்காக ரூ.6,946 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது நடப்பு நிதியாண்டுக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரங்கள், கிராமங்களில் இயங்கி வந்த பேருந்துகள், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மலைப்பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. திருநங்கைகள் சுமார் 29 லட்சம் பயணங்களும், மாற்றுத்திறனாளிகள் தரப்பில் 3.93 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது இந்த திட்டம் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருவதன் மூலம், இந்த விடியல் பயணத்திட்டத்தின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். பொதுவாக, அரசாங்கங்கள் இலவசங்களை அறிவிப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், விடியல் பயணத்திட்டம் இது போன்றதல்ல. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை எடுத்துக் கொள்வோம். கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைப்பதே பெரிய விஷயம். இதில் கல்வி கட்டணம் தாண்டி, பேருந்துகளில் பயணக்கட்டணம் கட்டுவது மலைப்பாக தெரியும். இத்திட்டம் மூலம் அந்த பணம் சேமிக்கப்படுகிறது.

அதேநேரம் அந்த குடும்பம் மகளிர் உரிமைத்தொகை பெறும் வீடாகவும் அமைகிறது. வீடு ஒன்றுதான். ஆனால், அரசால் ஒரே நேரத்தில் 2 திட்டங்கள் மூலம் வரவும் கிடைக்கிறது. சேமிக்கவும் முடிகிறது. இதனை கணக்கிடும்போது, அரசினால் ஒரு குடும்பம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பயனடைகிறது. இதேபோல குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பெண்கள், தங்கள் வருமானத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை பேருந்து கட்டணமாக செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த தொகையும் மிச்சமடைகிறது. இப்படி தமிழக பெண்கள் வாழ்வில் விடியலை தந்துள்ள, விடியல் பயண திட்டம் தொடர வேண்டுமென்பது தமிழக மக்களின் விருப்பமாகும்.

Related posts

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது

வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்

நீட் மோசடி: ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 3-ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்