மகளாக வேலை செய்ய ரூ.47,000 சம்பளம்…

சீனப் பெண் ஒருவர் பெற்றோருக்கு முழுநேர மகளாக பணியாற்றி மாதம் 4000 யுவான்கள் சம்பளமாகப் பெறுகிறார். சீனாவைச் சேர்ந்த நியானன் என்ற பெண் செய்தி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். 40 வயதான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பணியிடத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்ட காரணத்தினால், வேலைப் பளு கூடி மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் பணியில் எந்த நேரமும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்துள்ளது. இதனால் வீட்டிலும் யாரிடமும் பேசுவதில்லை. மேலும் பெற்றோருடனும் முகம் கொடுப்பதில்லை. எந்நேரமும் மன உளைச்சல், தலைவலி, தூக்கமின்மை என இருந்துள்ளார். இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையில் அவரது பெற்றோர் தலையிட்டு நியானனுக்கு உதவி செய்ய முயற்சி செய்தனர்.

நியானனின் பெற்றோருக்கு 10,000 யுவானுக்கும் அதிகமான (இந்திய ரூபாய் மதிப்பில் 1.17 லட்சம்) ஓய்வூதியம் கிடைத்துவருகிறது. அதிலிருந்து தங்கள் மகளுக்கு 4,000 யுவானை (ரூ.47,000) மாதாந்திரஉதவித் தொகையாக தருவதாக கூறியுள்ளனர். இது நல்ல யோசனையாக இருப்பதாக நினைத்த நியானன், தனது வேலையை விட்டுவிட்டு ‘முழுநேர மகள்’ என்ற வேலையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். தற்போது இந்த வேலை அன்பு நிறைந்த பணியாக இருப்பதாக நியானன் கூறுகிறார். முழு நேர மகளாக வேலை செய்யும் நியானன், பெற்றோருடன் சேர்ந்து நடனம் ஆடுவது, மளிகைச்சாமான் வாங்கி கொடுப்பது, உணவு சமைக்க உதவியாக இருப்பது, மின்சாதனப்பொருட்களைப் பழுது பார்ப்பது, ஓட்டுநராக பணியாற்றுவது, ஒவ்வொரு மாதமும் குடும்பத்தோடு வெளியில் செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை நியானன் மேற்கொண்டுவருகிறார்.பெற்றோருக்கு மகளாக பணியாற்றுவதற்காக, தான் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்த சீனப்பெண் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியிருக்கிறார். இதே போல் மனைவியாக, தாயாக , மகனாக,

தந்தையாக என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு சம்பளம் கிடைத்தால் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என கிண்டலாகவும் இணையவாசிகள் கூறி வருகிறார்கள். ஆனால் நியானனின் பெற்றோர்போல் எல்லா பெற்றோர்களும் வசதியானவர்களாகவோ , அல்லது வருமானம் பெறுபவர்களாகவோ இருப்பார்கள் என்பது நிச்சயமில்லாதபோது எப்படி மகள், மகனாக வேலை செய்ய பணம் கொடுக்க முடியும்என்னும் கேள்விகளும்கூட எழுந்துள்ளன.
– கவின்

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்