டேட்டிங் செயலி பெண்ணிடம் பழகிய துணை நடிகரிடம் ரூ.13,000 அபேஸ்: போலீஸ் போல் நடித்து கைவரிசை

பெரம்பூர்: வியாசர்பாடி பள்ள தெருவை சேர்ந்தவர் தாமோதிர கண்ணன் (24). சினிமாவில் துணை நடிகராக உள்ளார். இவர், கடந்த ஒரு மாதமாக தனது செல்போனில் ஒரு டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தி வந்துள்ளார். அதன்மூலம் இவருக்கு அகிலா என்ற பெண் பழக்கமாகி உள்ளார். தொடர்ந்து, இருவரும் அந்த செயலி மூலம் மெசேஜ் மூலம் பழகி வந்தனர். அப்போது, அகிலா தனக்கு பணம் அனுப்பினால், ஆபாச வீடியோக்கள் அனுப்புவதாக கூறியுள்ளார். அதன்பேரில், தாமோதிர கண்ணன், அந்த பெண் கூறிய எண்ணுக்கு கூகுள்பே மூலம் ரூ.1000 அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் தாமோதிர கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், சைபர் கிரைமில் இருந்து பேசுகிறேன். உங்களுடன் செல்போனில் பழகி வந்த அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். நீங்கள் அவருடன் தவறான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.எனவே, விரைவில் உங்களை கைது செய்ய உள்ளோம், என கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த தாமேதிர கண்ணன், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என கூறியுள்ளார். உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.60 ஆயிரம் தர வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.

அதற்கு தாமோதிர கண்ணன் தன்னிடம் ரூ.13 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறி, அதை கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தாமோதிர கண்ணன் இதுபற்றி வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், போலீஸ் எனக்கூறி பணம் பறித்த நபரை தேடி வருகின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!