டேட்டிங் செல்லும் மைனர் சிறுவர்களை கைது செய்யக்கூடாது: மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நைனிடால்: டேட்டிங் செல்வது தொடர்பான வழக்குகளில் சிறுமியின் பெற்றோர் புகாரின்பேரில் சிறுவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க முடியுமா என ஆராயுமாறு உத்தரகாண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்டில் வழக்கறிஞர் மனிஷா பண்டாரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் மைனர் பெண்ணுடன் டேட்டிங் சென்றதற்காக மைனர் சிறுவர் மட்டும் கைது செய்யப்படுவது நியாயமாகுமா? சிறுமிகளின் பெற்றோர் புகாரின்பேரில் சிறுவர்கள் மட்டும் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்படுவது நியாயமில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது பகாரி மற்றும் நீதிபதி ராகேஷ் தாபிலியால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘‘மைனர் சிறுவர்கள், சிறுமிகள் டேட்டிங் செல்வது தொடர்பான வழக்குகளில் புகாரின்பேரில் சிறுவர்கள் மட்டும் கைது செய்யப்படுவதை தவிர்க்க முடியுமா என்பது குறித்து அரசு ஆராய வேண்டும். அதிகபட்சமாக இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்குவதற்கு மட்டும் சிறுவர்களை அழைக்கலாம். ஆனால் கைது செய்யக்கூடாது. இந்த விஷயத்தை ஆய்வு செய்து காவல்துறைக்கு பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு